ஒவ்வொரு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஆறு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி ஏழாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதிக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் குறித்து பேசிய கருத்து சர்ச்சையாகியிருந்த நிலையில், தற்போது சீனா குறித்த கருத்து மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
டெல்லியில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் கிளப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘1962ஆம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா மோதலை சீனா படையெடுப்பு’ என்று குறிப்பிட்டார். மணிசங்கர் அய்யரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்தியாவின் வரலாற்றை மணிசங்கர் அய்யர் திரித்துக் கூறுவதாக பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மணிசங்கர் அய்யர் கருத்தில் இருந்து காங்கிரஸ் விலகிக் கொள்வதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
அந்த வகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “மணிசங்கர் அய்யர், ‘குற்றம் சாட்டப்பட்ட படையெடுப்பு’ என்ற சொல்லை தவறாகப் பயன்படுத்தியதற்காக நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்டார். அவரது வயதுக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்பட வேண்டும். காங்கிரஸ், அவரின் கருத்தில் இருந்து விலகி கொள்கிறது” என்று கூறி கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் சீனா ஊடுருவியது தொடர்பாக பிரதமர் மோடி மீது ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்தார்.