நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அதாவது, மே 17ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என ஜோன்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும் இருக்காது. மற்ற பகுதிகளில் தளர்வு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்கம் மே 17 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு விதிமுறைகளையும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,
அதன்படி,
மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது.
பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்கலாம். சமூக, அரசியல், பண்பாட்டு ரீதியிலான விழாக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும்.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை தொடர்ந்து நீடிக்கும். நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று வாகன போக்குவரத்தை நடத்திக் கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் மூன்று பேரும், இருசக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் இரண்டு பேர் பயணிக்கலாம்.
கிராமங்களில் தொழில் மற்றும் கட்டுமான பணிகளை நடத்துவதற்கு அனுமதி. அதேபோல் கிராமப் பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி.
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், கோச்சிங் சென்டர் ஆகியவை அடுத்த 21 நாட்களுக்கு திறக்கப்படாது.
விவசாய பணியில் ஈடுபடுவோர், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு, அறுவடை செய்தல் மற்றும் விவசாய பணிகள் தொடர்பான போக்குவரத்துக்கு தடை இருக்காது.
தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் நகர்ப்புறங்களில் கட்டுமான பணிகளை தொடரலாம்.
அதேபோல் கரோனா அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களில் சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ, கார் இயக்க தடை. சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மண்டலத்தில் தொற்றுள்ள பகுதிகளை தவிர ஏனைய இடங்களில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கும் மட்டும் நான்கு சக்கர வாகனங்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தவிர பிற இடங்களில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் மற்றொருவர் பயணிக்கலாம். சிவப்பு மண்டலங்களில் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம் மற்றொருவர் பயணிக்கக் கூடாது. சிவப்பு மண்டலத்தில் நகரப் பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகளை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களில் ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். எஞ்சிய ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.