Skip to main content

5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊதியம்; ஊழியர்கள் போராட்டம்!

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

puducherry papsco union workers issue 

 

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 65 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏ.ஐ.டி.யு.சி தலைமையில் கடந்த 14.9.2022 முதல் தொடர்ந்து 13 நாட்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்தனர்.

 

அப்போராட்டத்தின் விளைவாக 30.9.2022 அன்று அமைச்சர் அலுவலகத்தில், குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலாளர் உதயகுமார் முன்னிலையில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த பேச்சுவார்த்தையில் அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் 2 மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதென்றும், ஊழியர்கள் ஊதியம் பட்டுவாடா செய்வது அனைத்து கடன்களையும் தீர்ப்பது எனவும் அமைச்சர் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தார்.

 

அதனை ஏற்று ஊழியர்களின் தொடர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் அமைச்சர் உறுதியளித்தவாறு 2 மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நிலுவை ஊதியம் வழங்குவது, நிலுவையில் உள்ள கடனை அடைப்பது போன்றவை நடைபெறவில்லை. இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக 9.3.2023 அன்று காலை, துறையின் அமைச்சர் சாய் சரவணன் குமாரை சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் சந்தித்து கேட்டதற்கு ‘இப்பொழுதுதான் முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு வருகிறேன். முதலமைச்சர் பாப்ஸ்கோ நிறுவனத்தை நடத்த வேண்டாம்’ எனக் கூறினார். மேலும் 'இனிமேல் இந்தத் துறைக்கு நான் அமைச்சர் இல்லை. இனிமேல் என்னை வந்து பார்க்காதீர்கள். எதுவாக இருந்தாலும் முதலமைச்சரிடம் கேளுங்கள்' எனத் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து உடனடியாக முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் சொன்னதை தெரிவித்தோம். முதலமைச்சர் முழுமையாக காது கொடுத்து கேட்காமல் 'குழு அமைத்திருக்கிறேன்' என எங்களிடத்தில் தெரிவித்தார். அமைச்சரும், முதலமைச்சரும் பொறுப்பற்ற முறையில் முரண்பாடான கருத்துக்களை கூறி பாப்ஸ்கோ ஊழியர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வருவதாகவும் தேர்தலின் போது முதலமைச்சர் பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து நடத்தி ஊழியர்களின் நிலுவை சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதியை அளித்தார். மேலும், அமைச்சர் அவர்கள் 4 மாதத்திற்கு முன்பு சங்கத்தோடு நடந்த பேச்சுவார்த்தையில் 2 மாதத்தில் பாப்ஸ்கோ நிறுவனம் திறந்து நடத்தப்படும் நிலுவை சம்பளம்  கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் தலைமையில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு ஆறாவது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

 

இப்போராட்டத்திற்கு பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, மாநில கவுரவத் தலைவர் வி.எஸ்.அபிஷேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலவையில் உள்ள 65 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்