Skip to main content

என்னை மீண்டும் இந்துவாக மாறச்சொல்லி பா.ஜ.க.வினர் வற்புறுத்தினர்! - ஹதியா

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

தன்னை மீண்டும் இந்து மதத்துக்கு மாறச்சொல்லி சில பா.ஜ.க.வினர் வற்புறுத்தியதாக ஹதியா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற பெண் இஸ்லாமியராக மதம் மாற்றம் செய்துகொண்டு, செஃபின் ஜெகான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஹதியாவின் தந்தை அசோகன் தொடர்ந்த வழக்கை அடுத்து, லவ் ஜிகாத் எனக்கூறி இந்தத் திருமணத்தை ரத்து செய்தது கேரள உயர்நீதிமன்றம். இதுதொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

Hadiya

 

இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையில், ‘கேரள உயர்நீதிமன்றம் எனது திருமணத்தை ரத்து செய்து வீட்டுச் சிறையில் அடைத்தபோது, உள்ளூர் பா.ஜ.க. நிர்வாகிகள் என் அப்பாவின் துணையோடு வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் என்னை இஸ்லாமிய மதத்தை விட்டுவிட்டு மீண்டும் இந்துவாக மாறச் சொல்லி வற்புறுத்தினார்கள். என் அப்பாவின் பல்வேறு செயல்பாடுகளில் இந்த அமைப்புகள் பின்னிருந்து ஆதாயம் தேடப்பார்க்கின்றன. நான் என் கணவனோடு சேர்ந்தே வாழ ஆசைப்படுகிறேன்’ என தெரிவித்தார்.

 

ஹதியாவின் தந்தை அசோகன், ‘என் மகளின் பாதுகாப்பும், நல்வாழ்வும் மட்டுமே எனது நோக்கம். அவள் இஸ்லாமியத்திற்கு மாறியதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவள் திருமணம் செய்துகொண்டு சிரியாவிற்கு சென்று, அங்குள்ள தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமையாக வாழ்வதை என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது’ எனக் கூறினார். மேலும், ‘இனவாதக் குழுக்கள் எனது செயல்பாடுகளுக்குப் பின்னால் இருப்பதாக சொல்வது ஏற்புடையதல்ல’ எனவும் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்