இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மே ஒன்று முதல் மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் கரோனா தடுப்பூசியை, அதனை தாயரிக்கும் நிறுவனங்களிடம் இருந்தே வாங்கிக்கொள்ளலாம் என அனுமதியளித்த நிலையில், சீரம் நிறுவனமும், பாரத் பயோ-டெக் நிறுவனமும் முறையே தாங்கள் தயாரித்த கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு விலையை நிர்ணயித்தன.
கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம், மாநிலங்களுக்கு தடுப்பூசி 400 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்தது. பாரத் பயோ-டெக் நிறுவனம் தான் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மாநிலங்களுக்கு 600 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் தடுப்பூசி விலை அதிகமாக இருப்பதாக ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர்.
இந்தநிலையில் சீரம் நிறுவனம், மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி விலையில் 100 ரூபாயை குறைத்தது. மாநிலங்களுக்கு 300 ரூபாய்க்கு தடுப்பூசி விற்கப்படும் என சீரம் நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்தநிலையில் பாரத் பயோ-டெக் நிறுவனம், மாநிலங்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி விலையில் 200 ரூபாயை குறைத்துள்ளது. முன்பு 600 ரூபாய்க்கு கோவாக்சின் தடுப்பூசி மாநிலங்களுக்கு வழங்கப்படும் என பாரத் பயோ-டெக் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலங்களுக்கு 400 ரூபாய்க்கு வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பொது சுகாதார அமைப்புக்கு ஏற்பட்டுள்ள மகத்தான சவாலை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாக பாரத் பயோ-டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.