கலப்பு திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடி வீட்டிற்குள் வைத்து பூட்டப்பட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் அகமத்நகரைச் சேர்ந்த முகேஷ் ரான்சிங் (வயது 23) என்ற இளைஞர் ருக்மணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் மணமகளின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் இருவரும் திருமணம் முடிந்து ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு ருக்மணி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஓரிரு நாட்களில் முகேஷும், ருக்மணியும் சமாதானமான நிலையில், ருக்மணியை அழைத்து செல்ல முகேஷ் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ருக்மணியின் தந்தை ராமா பார்தி மற்றும் மைத்துனர்கள் சுரேந்திரா, கான்சாம் சரோஜ் தம்பதியினரை ஒருவீட்டிற்குள் வைத்து அடைத்துள்ளனர். பிறகு அந்த வீட்டை கொளுத்திவிட்டுள்ளனர். எரியும் வீட்டின் உள்ளிருந்த இருவரும் உதவி கேட்டு கத்தியுள்ளனர். வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தக்கொண்டிருந்த நிலையில் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
இதில் பலத்த தீக்காயங்கள் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 70 சதவிதம் தீக்காயம் அடைந்த ருக்மணி மருத்துவமனையில் உயிரிழந்தார். 50 சதவித தீக்காயங்களுடன் முகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.