இந்தியாவில் கரோனா பரவல் ஆரம்பித்த சில காலத்திலேயே, கரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. நாம் யாருக்காவது தொலைபேசியில் அழைப்பு விடுத்தால், இந்தக் காலர் ட்யூன் ஒலிக்க ஆரம்பித்துவிடும். இது எரிச்சலூட்டுவதாக பலர் புலம்பி நாம் பார்த்திருப்போம். முக்கியமான அழைப்பை மேற்கொள்ளும்போது, இந்தக் காலர் ட்யூனைக் கேட்டு நாமும் கூட எரிச்சலடைந்திருப்போம்.
இதன்தொடர்ச்சியாக தற்போது அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூறும் காலர் ட்யூன் ஒன்று, சமீபகாலமாக பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில், அந்தக் காலர் ட்யூன் எரிச்சலூட்டுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது. தலைநகர் டெல்லியில் நிலவிவரும் கரோனா நிலை குறித்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்துவருகிறது.
அந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது தடுப்பூசி பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ஒருவர் எப்போது அழைப்புகளை மேற்கொண்டாலும் எரிச்சலூட்டும் காலர் ட்யூன்களை ஒலிக்கச் செய்கிறீர்கள். உங்களிடம் போதிய தடுப்பூசி இல்லாதபோது, மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை. தடுப்பூசியே இல்லாதபோது யார் தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள்? பிறகு காலர் டியூன் செய்தியின் நோக்கம் என்ன?" என கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் நீதிபதிகள், “குறைந்தபட்சம் இந்த நாட்டிலுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு நீங்கள் பணம் வாங்கினாலும் பரவாயில்லை. குழந்தைகள் கூட இதைத்தான் கூறுகின்றன" என தெரிவித்தனர்.