தமிழில், நடிகர் கருணாஸ் கதாநாயகான நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நவ்நீத் ராணா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர், தன்னை பா.ஜ.கவில் இணைத்து கொண்டார். இந்த நிலையில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில், அதே தொகுதியான அமராவதியில் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் போட்டியிட்ட தொகுதியில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நவ்நீத் ராணா, பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் ஹைதராபாத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மாதவி லதாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், அந்தத் தொகுதி எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஓவைசியை கடுமையாக தாக்கிப் பேசினார். குறிப்பாக, அசாதுதீன் ஓவைசியின் சகோதரர் அக்பராவுதீன் கடந்த 2013ஆம் ஆண்டு பேசிய கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசினார். அது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு அக்பராவுதீன் பேசிய போது, ‘காவல்துறையை வெறும் 15 நிமிடங்களுக்கு அகற்றினால், நாட்டின் இந்து-முஸ்லீம் விகிதத்தை சமப்படுத்துகிறோம்’ என்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நவ்நீத் பேசும் போது, “அக்பராவுதீன் ‘15 நிமிடம் காவல்துறையை அகற்றுங்கள், நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவோம்’ என்கிறார். நான் அவரிடம் சொல்கிறேன், நீங்கள் 15 நிமிடம் எடுத்துக் கொள்வீர்கள், ஆனால், எங்களுக்கு 15 வினாடிகள் மட்டுமே இருக்கும். நீங்கள் 15 வினாடிகள் காவல்துறையை அகற்றினால், நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், எங்கு சென்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது” எனப் பேசினார். இவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, நவ்நீத் ராணாவின் இந்தப் பேச்சு குறித்து அசாதுதீன் ஓவைசி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் சொல்கிறேன். அவருக்கு 15 வினாடிகள் கொடுங்கள். அவர் என்ன செய்வார்? அவருக்கு 15 வினாடிகள் கொடுங்கள். ஒரு மணிநேரம் கூட கொடுங்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாமும் பார்க்க வேண்டும். அவர்களிடம் மனிதாபிமானம் எஞ்சியிருக்குமா? யாருக்கு பயம்? நாங்க ரெடி. யாராவது இப்படி செய்தால் அப்படியே ஆகட்டும். செய். உங்களை யார் தடுப்பது?” என்று கூறினார்.