ஆப்கானில் இந்தியா அரசு சார்பில் நூலகம் அமைத்து கொடுத்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கிண்டல் செய்திருந்தது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களை உண்டாக்கியது. உள்நாட்டு போரிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் ஆப்கானுக்கு இந்தியா சார்பில் மிக பெரிய நூலகமானது கட்டித் தரப்பட்டது. இதனை கிண்டல் செய்யும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப், 'இந்தியப் பிரதமர் மோடி எனிடம் அடிக்கடி , ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்கிறார். உங்களுக்குத் தெரியுமா, அந்த நூலகம் எங்கே இருக்கிறது?. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன். அந்த நூலகத்தில் அமர்ந்து 5 மணிநேரம் செலவு செய்திருப்பார்களா?' என கூறினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய அரசு, ‘போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி பணிகளால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும். தீவிரவாதத்தை ஒழிப்பதுடன் மட்டும் உலக நாடுகளின் பணிகள் முடிந்து விடவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான பணிகளை இந்தியா செய்து வருகிறது. பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு உதவித் தொகை என பல உதவிகளை இந்தியா செய்துள்ளது’’ என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமத் பட்டேல் கூறும்போது, ''இந்தியா குறித்தும் இந்திய பிரதமர் குறித்தும் ட்ரம்ப் கூறி இருப்பது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்தியா 2004 முதல் ஆப்கானில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உதவி வருகிறது'' என்றார்.