உங்களுடன் பொங்கல் கொண்டாட வருகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமானம் நிலையத்திற்கு வருகிறார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி. அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு காரில் சென்று போட்டியை நேரில் பார்க்கிறார். ராகுலுடன் சேர்ந்து தி.மு.க. கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்கிறார். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த தலைவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் ராகுல்காந்தி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்" என்று தமிழில் குறிப்பிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வீடியோவையையும் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கானத் தேர்தல் நெருங்கும் நிலையில், ராகுல்காந்தியின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.