உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு பா.ஜ.க கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் மத்திய அமைச்சர் பதவியை தங்கள் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்வார் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விவசாயிகளுக்கு சகோதரியாகவும், மகளாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஹர்சிம்ரத் கவுர், தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். இந்நிலையில், அவரின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூடுதலாக ஹர்சிம்ரத் கவுர் வகித்து வந்த உணவு பதப்படுத்தும் தொழில்துறையைக் கவனிப்பார் எனக் குடியரசு தலைவர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.