சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை மீட்டு ஒரு மணிநேரத்திற்குள் மருத்துவமனைகளில் சேர்த்து, அவர்களின் உயிரை காப்பாற்றுபவர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் வரும் 15 ஆம் தேதியிலிருந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் உயிரைக் காப்பாற்றிய மிகவும் தகுதியான 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குத் தேசிய அளவிலான விருதும், ஒரு லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. "சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்களை ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் மூலம் ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளது என இப்போது உணரப்படுவதாக" இந்த திட்டம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அண்மையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாகவும், அதில் 1,31,714 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.