கேரளா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி சட்டசபை செயலாளருக்குக் காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். அதன்பின் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில், முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துச் செயலாளருமான சிவசங்கர் நெருங்கிய தொடர்பிலிருந்தது அம்மாநில அரசியலில் தற்போது புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்க சிவசங்கருக்கு சுங்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரான சிவசங்கரிடம் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டி, முதல்வர் அலுவலகத்திற்கும், இந்த தங்கக்கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் சட்டசபை செயலாளருக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதால், கேரள சட்டசபையில் பினராயி விஜயன் அரசாங்கத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.