18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (நாளை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் புதுச்சேரியில் கடற்கரை ஒட்டிய பாறை மீது தியானம் செய்ய முயன்ற காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் தடுத்து நிறுத்தினர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கருங்கல் பாறை மீது காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தியானம் செய்ய முடிவெடுத்தார். 'காங்கிரஸ் வெற்றிபெறவும், ராகுல்காந்தி வெற்றிபெறவும் வேண்டி தான் அமைதியாக தியானம் செய்கிறேன் எனவே அனுமதி கொடுங்கள்' என அந்த நிர்வாகி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீசார் அனுமதி தர மறுத்துள்ளனர். ஆனால் இருப்பினும் தான் திட்டமிட்டபடி தியானம் செய்வேன் என கருங்கல்பாறை பகுதிக்கு வந்த அந்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் தடையை மீறி தியானம் செய்தால் கைது செய்வோம் என எச்சரித்து, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.