முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
“வெளிநாட்டிலிருந்து ஒரு பெண் தன் கணவர் மீது சந்தேகப்பட்டு கால் செய்தாள். அப்பெண் என்னிடம், கணவர் எங்கு சென்றாலும் தன்னை அழைத்துச் செல்வதில்லை அதனால் தனக்கு அவர் எங்கு செல்கிறார்? என்ன செய்து வருகிறார்? என்ற முழு விபரம் வேண்டும் என்றார். மேலும் வேலை ரீதியாக சென்னை புறப்பட்டுள்ளார் என்றும் அவரை சென்னை விமான நிலையத்திலிருந்து பின் தொடருங்கள் என்றும் கூறினாள்; அதன் பிறகு நான், அப்பெண்ணின் கணவர் என்ன ஆடை அணிந்துள்ளார், எப்படி இருப்பார் என்ற முழு விபரங்களையும் பெற்றுக்கொண்டு கண்காணிக்க ஒப்புக்கொண்டேன்.அந்த பெண்ணின் கணவர் சென்னை வருவதற்கு முன்பு என்னுடைய குழுவிடம், அவரை பின்பற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும் விமான நிலையத்தில் அவரை தவறவிட்டால் இந்த கேஸை முடிக்கமுடியாது என்று ஆலோசனை வழங்கினேன்.
அடுத்த நாள் காலையில் அந்த பெண்ணின் கணவர் சென்னை விமான நிலையம் வந்தார். என்னுடைய குழுவும் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தது. அந்த பெண்ணின் கணவர் சென்னையிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றார். பின்பு அங்குள்ள காவலரிடம் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு ரூம் கிடைக்குமா? என்று விசாரித்தோம். அதற்கு அந்த காவலர், இது வாடகைக்கு விடும் குடியிருப்பு பகுதி இல்லை. இங்கு குடியிருக்கும் எல்லோரும் குடும்பமாக இருக்கின்றனர் என்றார். இந்த விஷயத்தைத் தெரிந்த பிறகு உடனே அந்த பெண்ணுக்கு கால் செய்து, சென்னையில் உங்களுக்குத் தெரிந்த உறவினர்கள் இருக்கிறார்களா? என்று கேட்டேன். அதற்கு அவள் அப்படியெல்லாம் யாரும் இல்லை என்று சொன்ன அடுத்த நிமிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டாள். நான் அதற்கு தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன் என்று சமாளித்துவிட்டுத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவரைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று என் குழுவிடும் கூறினேன்.
இரவு முழுவதும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அந்த பெண்ணின் கணவர் அடுத்த நாள் குடியிருப்பிலிருந்து ஒரு காரில் வந்தார். காருக்குள் அவருடன் சேர்த்து மேலும் சிலர் இருந்தனர். அவரை விடாமல் பின்பற்றிய போது அவரின் கார் ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்றது அங்கு அவரும் ஒரு பெண்ணும் அந்த பெண்ணின் குழந்தைகளும் ஒன்றாக இருந்தனர். பின்பு அந்த குழந்தைகள், விசாரிக்கச் சொன்ன அந்த பெண்ணின் கணவரை அப்பா என்று அழைத்தனர். தொடர்ந்து அவருடன் இருந்த பெண்ணையும் அவளது குழந்தைகளைகளையும் கண்காணித்ததில், அவர் சென்னையில் தனது மனைவிக்குத் தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் உறவிலிருந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறார் என்று தெரியவந்தது. இந்த விஷயத்தை விசாரிக்கச் சொன்ன பெண்ணிடம் கூறினோம். உண்மையை அறிந்து மன வேதனையில் இருந்த அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை சட்டப்பூர்வமாக நிதானத்துடன் கையாளவேண்டும் என்று ஆலோசனை வழங்கினேன்” என்றார்.