உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அரசு அதையே வலியுறுத்தி வருகிறது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையிஸ் கடந்த 6 நாட்களில் கரோனா பாதிப்பு இந்தியாவில் இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும், கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசியை உருவாக்கும் நோக்கத்தில் விரைந்து செயல்பட்டு வருகிறோம், மாநிலங்களுக்கு 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவை தடுப்பதில் கேரள மாநிலம் முன்னிலையில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.