உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வெழுதினர்.
இந்த நிலையில், காவல்துறை பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் கசிந்து பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் இந்த தேர்வு ரத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வு 2023-ஐ ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத் தன்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் தப்ப முடியாது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.