உக்ரைன் மருத்துவ மாணவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்துவரும் போர் காரணமாக அங்கு மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பினார். உக்ரைனில் போர்ச்சூழல் இன்னும் நீடிப்பதால் அந்த மாணவர்கள் மீண்டும் உக்ரைன் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது கல்வி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்தியாவில் மருத்துவப்படிப்பைத் தொடர அவர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
அண்மையில் இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதரத்துறை எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தது. அந்தப் பதிலில், உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை. உக்ரைன் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது. அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் வாயிலாக மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்திய பிரதமர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.