இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள்(10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை சீனப் பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்தியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் காங்கிரஸ் கட்சியைச் சாடியுள்ளார். அமெரிக்க கோடீஸ்வரரான நெவில் ராய் சிங்கம் மற்றும் நீயுஸ்கிளிக் என்ற தனியார் ஊடக இணையதளத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரித்த போது காங்கிரஸ் பாதுகாத்ததாக அவர் குற்றம் சாட்டினார். நீயூ யார்க் டைம் என்ற ஆங்கில பத்திரிக்கையில், நெவில் ராய் சிங்கம் சீன அரசாங்க ஊடக இயந்திரத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். மேலும், உலகம் முழுவதும் அதன் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்து வருகிறார் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பதிவில், “ தி நியூயார்க் டைம்ஸ்(The Newyork times) ’ போன்ற செய்தித்தாள்கள் கூட நெவில் ராய் சிங்கமும் அவரது நியூஸ் கிளிக்கையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) ஆபத்தான கருவிகள் என்று ஒப்புக்கொண்டு, உலகம் முழுவதும் சீனாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கின்றன.
தி நியூயார்க் டைம்ஸ்-க்கு முன்பே, நியூஸ்க்ளிக் என்பது சீனப் பிரச்சாரத்தின் ஆபத்தான உலகளாவிய வலை என்று இந்தியா நீண்ட காலமாக உலகிற்குச் சொல்லி வருகிறது. ஒத்த எண்ணம் கொண்ட சக்திகளின் ஆதரவுடன், நெவில் ராய் சிங்கம் ஒரு சந்தேகத்திற்குரிய இந்திய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறார். 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் சட்ட அமலாக்க முகவர் பணமோசடிக்கான வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக விசாரணையைத் தொடங்கியபோது, காங்கிரஸும் ஒட்டுமொத்த இடது தாராளவாத சூழலும் அதைக் காக்க வந்தன.
நெவில்லையும், நியூஸ் கிளிக்கையும் பாதுகாப்பது காங்கிரஸுக்கு இயல்பானது. ஏனெனில் தேசிய நலன் அதன் தலைமைக்கு ஒருபோதும் முக்கியமில்லை. 2008ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதே காங்கிரஸ் கட்சி, சீனத் தூதரகத்திலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு (ஆர்ஜிஎஃப்) நன்கொடைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) தனது பெயரை ஆயிரம் முறை மாற்றலாம். கமாண்டியா கத்பந்தனின் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்காது என்பதை மக்கள் அறிவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று பாஜக மக்களவை உறுப்பினர் நிசிகாந்த் துபே, காங்கிரஸ் கட்சியினருக்கும், சீனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. அத்தோடு சீனாவில் இருப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்கிறது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனால் நேற்று மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில், அதனை எல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அதனால் பாஜகவினர் பதிலுக்கு முழக்கங்களை எழுப்பிய நிலையில், அமளி ஏற்பட்டதை தொடர்ந்து மக்களைவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.