மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவதாகக் கூறி கடைக்குச் சென்ற இளைஞர், புதிதாகத் திருமணமான பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டு (26) தனது தாயுடன் வசித்து வருகிறார். நேற்று மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிய குட்டு, சிறிது நேரத்தில் பெண் ஒருவருடன் வீட்டிற்கு வந்துள்ளார். தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், இனி அந்தப் பெண் இங்குதான் இருக்கப்போகிறார் எனவும் தெரிவித்துள்ளார். முதலில் இதனை நம்பாத குட்டுவின் தாய், பின்னர் இது உண்மை என அறிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். திருமணத்தை ஒப்புக்கொள்ள முடியாது எனக்கூறி இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது குட்டுவிடம் இதுகுறித்து விசாரிக்கையில், சுவேதா என்ற அந்தப் பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாகவும், ஊரடங்கு காரணமாகத் திருமண சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் டெல்லியில் வீடு ஒன்று எடுத்துத் தங்கவைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டெல்லியில் சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக வேறு வழியின்றி சுவேதாவை இங்கு அழைத்து வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் குட்டுவின் இந்தத் திருமணத்தை அவரது தாய் ஏற்றுக்கொள்ளாததால், இருவரும் மீண்டும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிற்கே திரும்பியுள்ளனர். மளிகைப் பொருட்கள் வாங்கச்சென்ற மகன் மருமகளை அழைத்துவந்த சம்பவம் தாய்க்கு மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.