இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சந்திரயான்- 2 விண்கலம், ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து "விக்ரம் லேண்டர்" பிரிந்து நிலவின் அருகில் சுற்றி வருகிறது. இது இன்று அதிகாலை 01.30 மணியளவில் நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது.
அதன் பிறகு 'பிரகியான் ரோவர்' நிலவின் நிலப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வை மேற்கொள்ளும். இந்த நிகழ்வை இந்தியா உட்பட உலகமே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. ரோவரில் இருபுறமும் சேர்த்து மொத்தம் 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிலவின் நிலப்பரப்பில் ஆய்வு செய்யும் சந்திரயான்-2 விண்கலத்தின் 'பிரகியான் ரோவர்' சக்கரத்தில் 'அசோகா சக்கரம்' சின்னம் மற்றும் இஸ்ரோ நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. நிலவில் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வு செய்யும் போது, 'அசோகா சக்கரம்' சின்னம் மற்றும் இஸ்ரோ நிறுவனத்தின் முத்திரை நிலவின் நிலப்பரப்பில் பதியும். நிலவில் காற்று மற்றும் மழை இல்லாததால், இந்த முத்திரை பல பில்லியன் காலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், இதுவரை எந்த ஒரு நாட்டின் சின்னமும் நிலவின் நிலப்பரப்பில் பதியவில்லை.