'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 50 தேசிய பேரிடர் மேலாண் படையினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் கரையேறிய 'அம்பன்' புயல் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 20 ஆம் தேதி மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே இந்தப் புயல் கரையைக் கடந்த போது, பெரும்பாலான பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடும் மழை பெய்ததோடு, மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், மரங்கள், மின்கோபுரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்நிலையில் 'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 50 தேசிய பேரிடர் மேலாண் படையினருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடித்துக்கொண்டு, ஒடிசாவின் கட்டாக் நகருக்குத் திரும்பிய 178 வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 50 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.