இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்துவரும் நிலையில், அப்பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் இதுவரை 52.40 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 2.33 கோடி தடுப்பூசிகள் இன்னும் மாநிலங்களிடமும் யூனியன் பிரதேசங்களிடமும் இருப்பு இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இதற்கிடையே, தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், இந்தத் தடுப்பூசி சான்றிதழை எளிதாக பெறுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், புதிய வழிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வழிமுறையின்படி, 91 9013151515 என்ற எண்ணை தொலைபேசியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் 'கோவிட் சர்டிபிகேட்' என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பிய பிறகு வரும் ஓ.டி.பி. எண்ணைப் பயன்படுத்தி, கரோனா தடுப்பூசி சான்றை நொடிகளில் பெறலாம். இந்தப் புதிய முறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு கோவின் செயலி மூலமே தடுப்பூசி சான்று பெறப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா தடுப்பூசி பெறுவதற்கான இந்தப் புதிய நடைமுறையைக் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், எளிதாகவும் விரைவாகவும் உள்ளதாக பாராட்டியுள்ளார்.