உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அயோத்தி ராமர் கோயில் என்பது பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் திட்டம். நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகின்றனர். மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். ராமரை வழிபடும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ், பாஜக நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ராமர் கோவில் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும்போதே தேர்தல் ஆதாயத்திற்காக இப்போதே திறப்பு விழா நடத்த பாஜக முனைந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமர் கோவில் விழாவில் மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதி ரஞ்சன் சௌத்ரியும் கலந்து கொள்ள மாட்டார் என காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.