
உத்தரப் பிரதேசம் மாநிலம் காஜிபூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் சிங் (40), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் மங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்றார்.
அப்போது, அவர் திடீரென்று தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அபிஷேக் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோவில் பேசி அதை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்ததாவது, ‘அவள் திருமணமானவள் என்பதும், அவள் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண்ணின் தாய் என்பதும் எனக்குத் தெரியாது. அவள் என்னை இப்படி ஒரு சூழ்நிலையில் தள்ளிவிட்டாள். என் வாழ்க்கை இப்போது சிக்கலில் உள்ளது. நான் அவளுடைய வலையில் மிகவும் மோசமாக விழுந்துவிட்டேன், இப்போது என் வாழ்க்கை பாழாகிவிட்டது. இப்போது வாழ்வதில் என்ன பயன்? . அவள் என்னை இவ்வளவு பெரிய நிலைக்குக் கொண்டு வந்துவிட்டாள். இதை என் மரண வாக்குமூலம்: அவள் மக்களைப் பயன்படுத்துகிறாள். செலவுக்காக மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறாள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட அபிஷேக் சிங்கின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, உடலை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர். அந்த விசாரணையில், அபிஷேக் சிங்குடன் மோனிகா சிஹாக் என்ற பெண் உறவில் இருந்துள்ளார். தன்னை திருமணம் செய்யுமாறு அபிஷேக் சிங், மோனிகாவிடம் கேட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த மோனிகா, தனக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாகக் கூறியுள்ளார். இதனை கேட்டு அபிஷேக் சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கிடையில் மோனிகா, அபிஷேக்கிடம் சுமார் 10-15 லட்சம் பணம் வாங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அபிஷேக் சிங், தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மோனிகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.