
அசோம் கன பரிஷத் கட்சியின் முன்னாள் தலைவரான பிரஃபுல்ல குமார் மஹந்த, அசாம் மாநிலத்தில் இரண்டு முறை முதல்வராக பதவி வகித்தார். 1985- 1990 மற்றும் 1996 -2001 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு பிரஃபுல்ல குமார் மஹந்த வெற்றி பெற்று முதல்வரானார். தற்போது அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் வகிக்கவில்லை. இருந்த போதிலும் அவரது குடும்பத்துடன் எம்.எல்.ஏ விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவரது மகள், ஒரு ஓட்டுநரை செருப்பால் அடித்து தாக்குவது போல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தலைநகர் திஸ்பூர் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு எம்.எல்.ஏ விடுதியின் வளாகத்திற்குள், முன்னாள் முதல்வர் பிரஃபுல்ல குமார் மஹந்தாவின் மகள் முன் ஒரு நபர் மண்டியிட்டு இருக்கிறார். அவர், அந்த நபரை திட்டி செருப்பால் அடிக்கிறார். இந்த சம்பவத்தை மற்ற பணியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பிரஃபுல்ல குமாரின் மகள் காஷ்யப் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அவர் எப்போதும் குடிபோதையில் இருப்பார், என்னைப் பற்றி தவறான கருத்துக்களை தெரிவிக்கிறார். இது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அவருக்குப் புரிய வைக்க முயற்சித்தோம், அப்படிச் செய்ய வேண்டாம் என்று சொன்னோம். ஆனால் இன்று அவர் எங்கள் வீட்டின் கதவைத் தட்டத் தொடங்கியபோது அது எல்லா வரம்புகளையும் தாண்டியுள்ளது” என்று கூறினார்.