
17 வயது சிறுமியை பிணைக் கைதியாக்கி 5 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணா விழாவில் ஒரு இளைஞரை சந்தித்துள்ளார். இருவரும் பேசத் தொடங்கியுள்ளனர். நாளடைவில் இருவருக்குள் நட்பு மலர்ந்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி இளைஞருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால், கோபமடைந்த அந்த இளைஞர் தன்னை சந்திக்க வேண்டுமென்று சிறுமியுடன் கூறியுள்ளார். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால், தன்னை சந்திக்காவிட்டால் அவரது வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என்று இளைஞர் மிரட்டியுள்ளார். இதில் பயந்து போன சிறுமி, இளைஞர் கூறிய ஜான்சி என்ற இடத்துக்கு சென்றார். அங்கு சென்றவுடன், சிறுமியை பிணைக் கைதியாக்கி வலுக்கட்டாயமாக 5 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பிறகு, அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த 1ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.