குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 10- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் துணை தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பதற்கான பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (16/07/2022) மாலை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, "பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்கம் மாநில ஆளுநராக உள்ள ஜெகதீப் தன்கர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.