
காற்றாலை மூலம் சுத்தமான நீரை உற்பத்தி செய்யுங்கள் எனப் பிரதமர் மோடி கூறியதை கிண்டல் செய்திருந்த ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
ராகுல்காந்தி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, ஒரு காற்றாலை நிறுவன தலைமை செயல் அதிகாரியோடு உரையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி சுத்தமான குடிநீர், ஆக்சிஜன் ஆகியவற்றையும் உற்பத்தி செய்யுமாறு மோடி யோசனை தெரிவித்திருந்தார். இதனைக் கிண்டல் செய்யும் விதமாக கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, “நமது பிரதமர் புரிதல் இல்லாதவர் என்பது உண்மையான ஆபத்து இல்லை. ஆனால், அவரை சுற்றி இருப்பவர்களுக்கு அதை எடுத்துச்சொல்லும் துணிவு இல்லை என்பதுதான் ஆபத்தானது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "ராகுல்காந்தி புரிதல் இல்லாதவர் என்பதை சொல்லும் துணிச்சல், அவரைச் சுற்றி இருக்கும் யாருக்கும் இல்லை. பிரதமரின் யோசனையை உலகின் முன்னணி காற்றாலை நிறுவன தலைமை செயல் அதிகாரியே ஆதரிக்கும்போது, ராகுல்காந்தி கேலி செய்கிறார்" எனத் தெரிவித்து, காற்றாலையிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்வது தொடர்பான ஊடக செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.