அண்மையில் நடந்து முடிந்த மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 32 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து, தலைநகர் இம்பாலில் பா.ஜ.க.வின் மேலிடப் பார்வையாளர்களான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (20/03/2022) கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டடார். அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் மணிப்பூர் ஆளுநர் இல.கணேஷணைச் சந்தித்த பிரேன் சிங், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.
மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராகத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள பிரேன் சிங்கின் அரசியல் பாதை குறித்து பார்ப்போம்!
கடந்த 2002- ஆம் ஆண்டு ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் பிரவேசத்தைத் தொடங்கியவர் பிரேன் சிங். ஹெய்ன்காங் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்றார். அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து, கடந்த 2003- ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் அமைச்சரவையில் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2007- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மீண்டும் அமைச்சரானார். இதையடுத்து, 2012- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மூன்றாவது முறையாக ஹெய்ன்காங் தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், இபோபி சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2016- ஆம் ஆண்டு விலகிய பிரேன் சிங், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராகவும், தேர்தல் குழு இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஹெய்ன்காங் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற அவர், மணிப்பூர் மாநில முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றார். அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பா.ஜ.க. வெறும் 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியோ 28 தொகுதிகளில் வெற்றிப் பெற்றிருந்தது.
அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்து சில சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை பா.ஜ.க. பக்கம் வரவழைத்து ஆட்சி அமைத்தார். தற்போதைய, தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் முதலமைச்சராக பிரேன் சிங் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.