மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சுவேந்த் அதிகாரி மம்தாவைத் தோல்வியடையச் செய்தார். இருப்பினும், அம்மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர், பபானிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இதில் பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடவுள்ளார். இதற்காக மம்தா அண்மையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் மம்தா பானர்ஜியின் வேட்பு மனுவிற்கு பாஜக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மம்தாவிற்கு எதிராக பாஜக சார்பாகக் களமிறக்கப்பட்டுள்ள பிரியங்கா திப்ரேவாலின் தலைமைத் தேர்தல் முகவர், மம்தா பானர்ஜி தனக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.