உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இம்மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், தற்போதே தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன.
இந்தநிலையில் பாஜக, தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சி நியமித்துள்ளது.
பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியை உத்தரகண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கோவாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபிந்தர் யாதவ் மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களைத் தவிர சில மத்திய அமைச்சர்களும், மத்திய இணை அமைச்சர்களும், எம்.பிக்களும் இந்த ஐந்து மாநிலங்களிலும் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.