இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகிவருகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் நேற்று (09.05.2021) ஒரேநாளில் மேலும் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 818 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமான மஹாராஷ்ட்ராவில், ஆறுதல் அளிக்கும் விதமாக கரோனா பரவல் குறைந்து வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியான நிலையில், நேற்று அம்மாநிலத்தில் 48 ஆயிரத்து 401 பேருக்கே கரோனா உறுதியாகியுள்ளது. கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.