காலநிலை மாற்றம் தொடர்பான புதிய புதிய நிகழ்வுகளை உலகம் அனுதினமும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் வானில் தோன்றிய வினோத வெளிச்சம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை அன்று பெங்களூரு நகரில் மேகமூட்டத்தில் திடீரென வினோதமான கதவின் வாயிற்படி போன்ற வெளிச்சம் ஏற்பட்டது. வசீம் என்ற இளைஞர் அந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மின்னல் வெட்டும் மேகமூட்டத்திற்கு இடையே கதவிற்கான வாயிற்படி போலத் தோன்றும் இந்தக் காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவில் வானில் மேகங்கள் திடீரெனக் குவியல் குவியலாகச் சற்று சீரான இடைவெளியில் அடுக்கி வைத்ததைப் போலத் தோன்றியது. இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த மக்கள், அந்த விநோத மேகக்கூட்டத்தைப் படம்பிடித்து சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றியதைத் தொடர்ந்து அது வைரலானது. இந்த மேகக்கூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது எனச் சிலரும், பார்க்கவே பயமாக உள்ளது, உலகத்திற்கு என்னவோ நடக்கப்போகிறது என்று சிலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர். இன்னும் சிலர் இது அனிமேஷன் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த மேகக்கூட்டம் உண்மைதான். இந்த நிகழ்வு மம்மடஸ் (mammatus) என்று அழைக்கப்படுகிறது என அறிவியலாளர்கள் தெரிவித்தனர். மம்மடஸ் இடியுடன் மழை அல்லது ஆலங்கட்டி மழை வருவதற்கான அறிகுறிதான் எனவும் தெரிவித்திருந்தனர். பெங்களூர் நகரில் தோன்றியிருக்கும் நிகழ்வும் அதே மம்மடஸ் (mammatus) நிகழ்வா அல்லது வேறு ஏதேனும் ஒன்றாக இருக்குமா என்ற கேள்வியால் அதிசயிக்க வைத்துள்ளது 'வானம்'.