நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.
இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் கடந்த 24ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனை தொடர்ந்து, சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளின் போது, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு பா.ஜ.கவில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி, மத்தியப் பிரதேசத்தில், கடந்த 19ஆம் தேதி 6 தொகுதிகளுக்கும், கடந்த 26ஆம் தேதி மீதமுள்ள 6 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவி நடைபெற்றது. நான்காம் கட்டமாக நடைபெறும் தேர்தலில் இந்தூர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அக்ஷய் கண்டி பாம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அதே போல், பா.ஜ.க சார்பில் தற்போதைய சிட்டிங் எம்.பியான சங்கர் லால்வாணி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 25ஆம் தேதியுன் நிறைவடைந்து, கடந்த 26ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற நேற்று (29-04-24) கடைசி நாள் ஆகும்.
இந்த சூழ்நிலையில், இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் கண்டி பாம் நேற்று (29-04-24) தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அக்ஷய் கண்டி பாம் வாபஸ் பெற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே பா.ஜ.க அலுவலகத்துக்கு சென்று பா.ஜ.கவில் இணைந்துள்ளார். ஏற்கனவே, சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் செய்து பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.