நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், போலீசார் என 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டனர். மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
செங்கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கலந்துகொள்ளவில்லை. சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “நான் காலை 9.20 மணிக்கு என்னுடைய வீட்டில் தேசியக் கொடியை ஏற்றவேண்டும். அதன் பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்குச் சென்று தேசியக் கொடி ஏற்ற வேண்டும். அதனால் செங்கோட்டைக்குச் செல்ல முடியவில்லை. அங்கு பாதுகாப்பு கெடுபிடி இருந்தது. பிரதமர் வெளியேறுவதற்கு முன்பாக பாதுகாப்பு வீரர்கள் மற்றவர்களை வெளியேற அனுமதிப்பதில்லை. அதனால் என்னால் நேரத்துக்கு வந்திருந்து கொடியை ஏற்ற முடியாது. நேரமின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நான் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என நினைத்தேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் மல்லிகார்ஜுன கார்கே, "கடந்த சில வருடங்களில் தான் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும் போது இங்கு ஒரு துரும்பும் இல்லை. அதன் பிறகு நேருவின் முன்னெடுப்பால் தான் இரும்பு எஃகு ஆலைகள், அணைகள் உருவாக்கப்பட்டன. ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்து நாட்டில் உணவுப் பொருளில் தன்னிறைவு பெறச் செய்தனர். நாட்டில் சிலர் தொழில் நுட்பத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது ராஜீவ் காந்தி தொலைத்தொடர்பு புரட்சியைக் கொண்டு வந்தார்.
இன்று ஜனநாயகம், அரசியலமைப்பு, தன்னாட்சி அமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன என்பதை வேதனையுடன் தெரிவிக்கிறேன். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்கள் முடக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்கள் முடக்கப்படுக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.