Skip to main content

“எல்லோரையும் விலைக்கு வாங்கும் ஒரு கட்சிதான் நாட்டில் இருக்கிறது” - அரவிந்த் கெஜ்ரிவால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Arvind Kejriwal says There is only one party in the country that buys everyone

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்த சூழலில் நேற்று (02-02-24) கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தவுள்ளதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இது தொடர்பாகப் பேசிய அவர், “டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரை பாஜக தொடர்பு கொண்டு அவர்களுக்கு ரூ. 25 கோடி வரை தருகிறோம்; தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தருகிறோம் என்று கூறி தங்கள் பக்கம் வருமாறு பேரம் நடத்தியுள்ளது. மதுபான கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவாலை விரைவில் கைது செய்துவிடுவோம்; பின்னர் தன் பக்கம் எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியைக் கவிழ்த்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த 7 எம்.எல்.ஏக்களும் அதனைப் புறக்கணித்துள்ளனர்” என்றார். 

அரவிந்த் கெஜ்ரிவால் வைத்திருந்த இந்த குற்றச்சாட்டினை எதிர்த்து டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான பா.ஜ.க குழு ஜனவரி 30 ஆம் தேதி டெல்லி காவல்துறையினரிடம், அரவிந்த் கெஜ்ரிவாலின் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு மனு கொடுத்தனர். அதன் பேரில், இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் வழங்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு குற்றப்பிரிவு குழு கடந்த 2 ஆம் தேதி சென்றது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அந்த நோட்டீஸை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (05-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “குற்றப்பிரிவில் இருந்து வந்த அதிகாரிகள் என் வீட்டு முன்னால் நாடகம் ஆடினார்கள். இதற்காக அவர்கள் காவல்துறையில் சேரவில்லை. அவர்களின் அரசியல் எஜமானர்கள் டெல்லி காவல்துறையை கேலி செய்கிறார்கள். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க யார் அணுகினார்கள் என்று கேட்டனர். இது யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டதா? எல்லோரையும் விலைக்கு வாங்கும் ஒரே ஒரு கட்சிதான் நாட்டில் இருக்கிறது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்