உத்தரப் பிரதேச மாநிலம் மதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாமா கவுதம் (24). இந்த இளைஞருக்கு அம்மாவட்டத்தில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. அதன்படி, துலாபூர் பகதூரன் என்ற கிராமத்தில் அவர்கள் இருவருக்கும் திருமண விழா நடைபெற்றது.
அந்த விழாவையொட்டி, மணமகன் சுதாமா கவுதம், குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அங்கு வந்தவர்கள், இளைஞர் சுதாமா கவுதம் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆசிட் ஊற்றியதில், சுதாமா கவுதமும், அவருடன் குதிரை வண்டியில் அமர்ந்திருந்த 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மணமகன் தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், சுதாமா மீது ஆசிட் ஊற்றி தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, தப்பிச் சென்ற 3 நபர்களையும் போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 3 பேரில் ஒருவரான சச்சின் பிண்ட் (23) என்ற வாலிபர், சுதாமாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த சச்சின், இந்தத் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மணமகன் மீது ஆசிட் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.