Skip to main content

வாகன உற்பத்தி ஆலை; அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
CM MK Stalin foundation stone was laid by Vehicle Manufacturing Plant

இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காகத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13ஆம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (28.09.2024) அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி. ராஜா, ஆர். காந்தி, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கடந்த 1969 ஆம் ஆண்டு  டாடா நிறுவனர் ஜே.ஆர்.டி. டாடாவுடன், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் இருக்கும் புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் அன்பளிப்பாக வழங்கினார். அதோடு ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கரில் அமையவுள்ள காலணி ஆலைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

சார்ந்த செய்திகள்