விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில், இன்று (28.09.2024) அதிகாலையில் யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் தீ விபத்து ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்று முதலில் கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் இந்த வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் சுமார் 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்த நிலையில் மற்ற தொழிலாளர்கள் நிலையை அறிவதில் சிக்கல் எழுந்துள்ளது. சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாகப் பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருப்பதால் யாரும் அருகில் செல்ல முடியாத சூழலும் நிலவுகிறது. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதோடு இந்த தீ விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்புப் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீயானது பட்டாசு ஆலையில் பெரும்பாலான பகுதியில் பரவி உள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் தீயணைக்கும்போது 15 வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். அதாவது தீயை அணைக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது எதிர்பாராத விதமாகப் பட்டாசு ஆலை அறைகள் வெடித்துச் சிதறின. இதில் நல்வாய்ப்பாக 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு வெடி விபத்தில் இருந்து உயிர் தப்பினர். இதற்கிடையே இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தால், ஆலையைச் சுற்றி உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பயங்கர அதிர்வுடன் பட்டாசுகள் வெடித்து வருவதால் டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளதாக மக்கள் வேதனையடைந்துள்ளனர்.