Skip to main content

‘மதுரையில் உண்ணாவிரத போராட்டம்’  - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! 

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
Edappadi Palaniswami announcement for Fasting at Madurai 

தமிழகத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து மதுரையில் அக்டோபர் 9ஆம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்; அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தப்படும்.

இளைஞர்கள், பெண்கள் நலனை முன்னிறுத்தி அதிமுக ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம், மாணவர்களுக்கு மடிக் கணினி உள்ளிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசில் செயல்படுத்தப்பட்ட பல முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிறுத்தியதைக் கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையை 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்தும், அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தையும், அதனால் ஏற்படும் சமூக விரோத குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

அதிமுக புரட்சித் தலைவி பேரவை சார்பில் மதுரை மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அக்டோபர் 9ஆம் தேதி (09.10.2024) நடைபெறும். மேலும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு பதவியேற்று 40 மாத காலத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து செயல்படாமல், மக்கள் மத்தியில் மாயத் தோற்றத்தை உருவாக்கி, தனது குடும்ப நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வருவது, தமிழக மக்களுக்குச் செய்து வரும் மாபெரும் துரோகமாகும். முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசின் இத்தகைய அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்