பாஜக மூத்த தலைவரும், எம்.பி யுமான அனந்த் குமார் ஹெக்டே, பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, "ஒட்டுமொத்த சுதந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது. மேலும் அது நேர்மையான போராட்டமே இல்லை. காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம், சத்யாகிரகம் ஆகியவையும் ஒரு நாடகம்தான்" என்று பேசினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அனந்த் குமார் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மோடி கடும் அதிருப்தி அடைந்ததாகவும், இந்த பேச்சு குறித்து விளக்கம் கேட்டு அனந்த் குமார் ஹெக்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அனந்த் குமார், "நான் எந்த ஒரு அரசியல் கட்சி பற்றியோ அல்லது மகாத்மா காந்தி பற்றியோ தவறாக பேசவில்லை. சுதந்திர போராட்டத்தை வகைப்படுத்தவே நான் முயற்சித்தேன். எனது அந்த பேச்சை யாராவது பார்க்க விரும்பினால், ஆன்லைனில் பார்க்கலாம். எனது இணையதள பக்கத்திலும் அந்த பேச்சு இடம் பெற்றுள்ளது. மகாத்மா காந்தி பற்றியோ, நேரு பற்றியோ நான் ஒரு வார்த்தை கூட தவறாக கூறவில்லை. சுதந்திர போராட்டம் பற்றி மட்டுமே நான் விவாதித்தேன்" என தெரிவித்தார்.