நாட்டு மக்களுக்கு தேவையான உணவுப்பொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அரசின் கைவசம் உள்ளதால் யாரும் கவலைப்பட வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே மூன்றாம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
இன்று காலை நாட்டு மக்களிடம் இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஏப்ரல் 20 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடரும் இந்த ஊரடங்கு, அதன்பின் ஒவ்வொரு பகுதியில் உள்ள கரோனா பரவல் நிலையைப் பொருத்து பகுதிவாரியாகத் தளர்த்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கரோனா பரவல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் உள்துறை அமைச்சராக நான் நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதி அளிப்பது என்னவெனில், நாட்டில் போதுமான உணவுப்பொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கைவசம் உள்ளன. குடிமக்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். வசதி படைத்தவர்கள் அவர்கள் பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு உதவ முன் வர வேண்டும்.
அனைத்துக் குடிமக்களும் லாக்-டவுன் நடைமுறைகளைக் கடைப்பிடித்து நமது ஒருங்கிணைந்த செயல்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் ஆற்றும் பணியானது ஒவ்வொரு இந்தியருக்கும் அகத்தூண்டுதல் அளிப்பதாகும். அனைவரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.