இன்றுடன் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியின் இந்திராகாந்தி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்தாடுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும், இரவோடு இரவாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பத்திரிகை சுதந்திரம், உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டன. 1977 மார்ச் 21 வரை இந்த அவசரநிலை நாடு முழுவதும் நீடித்தது.
இந்த அவசர நிலை கொண்டுவரப்பட்டு இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, "45 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஒரு குடும்பத்தின் அதிகார பேராசைக்காக அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஒரே இரவில் தேசம் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. பத்திரிகைகள், நீதிமன்றங்கள், சுதந்திரமான பேச்சு அனைத்தும் நசுக்கப்பட்டு. ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள் மீது அட்டூழியங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
லட்சக்கணக்கான மக்களின் முயற்சியால், இந்த அவசரநிலை நீக்கப்பட்டது. இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது, ஆனால் இன்னும் காங்கிரஸில் இன்னமும் ஜனநாயகம் இல்லாமல்தான் இருக்கிறது. ஒரு குடும்பத்தின் நலனே, கட்சி நலன் மற்றும் தேச நலனை விட முக்கியமாக இருக்கிறது. இந்த வருந்தத்தக்க நிலை இன்றைய காங்கிரஸிலும் தொடர்கிறது. ஏன் அவசரக் காலம் மனநிலையில் இன்னும் இருக்கிறோம்? ஒரு குடும்பத்தின் பரம்பரையைத் தவிர்த்து மற்ற தலைவர்களால் ஏன் கட்சிக்குள் பேச முடியவில்லை? காங்கிரசில் தலைவர்கள் ஏன் விரக்தியடைகிறார்கள்? என்ற கேள்விகளைக் காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.