வரலாற்றில் முதல் முறையாக கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்திருந்தார். முதலில் சென்னை டூ கோவை இடையேயான வந்தே பாரத் ரயில், சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்ட புதிய முனையம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அன்றிரவு பெங்களூருக்கு சென்ற பிரதமர் மோடி, அடுத்தநாள் காலை விமானம் மூலம் பந்திபூருக்கு சென்று அங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, ஆஸ்கர் விருதுபெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து அவர்களுக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் ஈஸ்டர் என்பதால் டெல்லி திரும்பிய மோடி அங்குள்ள சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் கத்தோலிக்க தேவாலயத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவாலய பாதிரியார்கள் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேவாலயத்திற்குள் சென்ற பிரதமர் மோடி பாதிரியார்களுடன் ஒன்றாக அமர்ந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி, அங்கிருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையின் முன்பாக, பிரதமர் மோடி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தார். இதையடுத்து, தேவாலயம் சார்பில் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்ட நிலையில், தேவாலய வளாகத்தில் சில மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
அதே சமயம், இந்த தேவாலயத்திற்கு வருகை அளித்த முதல் பிரதமர் என்ற பெருமையை அடைந்த நரேந்திர மோடி, இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- சிவாஜி