இந்திய மொபைல் காங்கிரஸ் 2021-ல் கலந்துகொண்டு பேசிய இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, மொபைல் சாதனங்களுக்கு அரசு மானியம் அளிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய மொபைல் காங்கிரஸில் முகேஷ் அம்பானி பேசியதாவது; “கொள்கைச் சூழலில் மலிவு விலையைப் பற்றிப் பேசும்போது, மலிவான சேவையை பற்றி மட்டுமே நாம் யோசிக்கிறோம். உண்மையில் சேவைகள் மட்டுமின்றி, சாதனங்களும் அதன் பயன்பாடும் மலிவு விலையில் கிடைப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.
விரிவான மலிவுத்திறனை உறுதி செய்வதற்கான சிறந்த வழி, எதிர்கால தொழில்நுட்பங்ளையும், சேவைகளை தவிர பிற நோக்கங்களுக்காக யுஎஸ்ஓ நிதியைப் பயன்படுத்துவது போன்ற ஆதரவான கொள்கைகளையும் விரைவாக ஏற்றுக்கொள்வது ஆகும். வாடிக்கையாளர் இலக்கு குழுக்களைத் தேர்ந்தெடுப்பதற்காக சாதனங்களுக்கு மானியம் வழங்க யுஎஸ்ஓ நிதியை பயன்படுத்தலாம்.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தையான இந்தியா, 2G இலிருந்து 4G க்கும், பின்னர் 5G க்கும் விரைவில் மாற வேண்டும். ஜியோவில், நாங்கள் தற்போது 4ஜி மற்றும் 5ஜி வழங்குவதிலும் பிராட்பேண்ட் உள்கட்டமைப்பு விரிவாக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
2ஜிக்குள் அடைக்கப்பட்டு, சமூக-பொருளாதார பிரமிட்டின் அடிமட்டத்தில் மில்லியன் கணக்கான இந்தியர்களை வைத்திருப்பது டிஜிட்டல் புரட்சியின் பலன்களை அவர்களிடமிருந்து பறிப்பதாகும். 5ஜி சேவையை தொடங்குவது இந்தியாவின் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி குறிப்பிட்ட யுஎஸ்ஓ நிதி என்பது, பாரபட்சமின்றி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக இந்திய அரசு உருவாக்கிய நிதியம் என்பது குறிப்பிடத்தக்கது.