Skip to main content

“காங்கிரசிற்கு என்னதான் ஆச்சு?” - அமித்ஷா பேச்சு!

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
Amit Shah speech about PoK

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அணுகுண்டு வைத்திருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா மரியாதை கொடுக்க வேண்டும். நாம் அவர்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால், இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டைப் பயன்படுத்த நினைப்பார்கள். அவர்களிடம் பேச வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, நாம் நமது இராணுவ வலிமையை அதிகப்படுத்துகிறோம். இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது. 

மேலும் அவர்களிடம் அணுகுண்டுகள் உள்ளன. ஒரு பைத்தியக்காரன் இந்தியாவில் குண்டுகளை வீச முடிவு செய்தால் என்ன நடக்கும்? அதே போல ஒரு பைத்தியக்காரன் லாகூரில் வெடிகுண்டு வீச முடிவு செய்தால், அதன் கதிர்வீச்சு அமிர்தசரஸை அடைய 8 வினாடிகள் எடுக்காது” என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை பா.ஜ.க பகிர்ந்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மொத்தம் 14 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் மே 13ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நான்காம் கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “அணுகுண்டு வைத்திருப்பதால் பாகிஸ்தானை மதிக்க வேண்டும் என்று மணிசங்கர் ஐயர் கூறுகிறார். பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச வேண்டாம் என்று இந்தியா கூட்டணித் தலைவர் பரூக் அப்துல்லா சில நாட்களுக்கு முன்பு கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுக்கு சொந்தமானது, எந்த சக்தியும் அதைப் பறிக்க முடியாது என்பதை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

காங்கிரஸுக்கு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், இப்போது அணுகுண்டு பற்றிப் பேசி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது கேள்விக் குறி வைக்கிறீர்கள். பா.ஜ.க.வின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவிற்கு சொந்தமானது. அது இந்தியாவுடன் இருக்கும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 70 ஆண்டுகளாக தடைகளை ஏற்படுத்திய காங்கிரஸ், பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் கோவில் கட்டினார். ராகுல் காந்தி தனது வாக்கு வங்கிக்கு பயந்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் எந்தப் பழங்குடியினரையும் குடியரசுத் தலைவராக்கத் தவறியது ஏன் என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்