இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை நடைபெற உள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்திற்கு மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாகவும், மணிப்பூர் வன்முறை விவகாரம் குறித்து நாளை கூட உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதே சமயம் மழைக்காலக் கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் மசோதா, வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.