டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். மேலும் இது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். மேலும் அமலாக்கத்துறையின் சம்மன்கள் பொய்யானவை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனில் ஜனவரி 18 ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.