புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் கௌரிசங்கர். சம்பவத்தன்று 3 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று கலைஞர் சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் பணம் கேட்டு மிரட்டி விட்டு அந்தக் கடையில் விற்பனைக்காக தொங்கிய குல்லாவை எடுத்து மாட்டிக் கொண்டு அருகில் இருந்த கௌரிசங்கரின் நகைக் கடைக்குள் நுழைந்தனர். பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டடுள்ளனர். பணம் கொடுக்காததால் நகை எடை வைக்கும் தராசு மற்றும் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் ஆலங்குடியில் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் வணிகர்கள் பெரும் அச்சத்துடனேயே உள்ளனர். இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் கௌரி சங்கர் சிசிடிவி பதிவுகளுடன் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவோடு இருந்த சிசிடிவி பதிவுகளைப் பார்த்த போலீசார் பணம் கேட்டு தகராறு செய்து கடை கண்ணாடியை உடைத்த நபர்களை அடையாளம் கண்டுபிடித்தனர்.
ஆலங்குடி அருகில் உள்ள நெம்மக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் விஷ்ணுராஜ் (27) இவர் இந்து முன்னணி மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதால் காவல் நிலைய குற்றப்பதிவேட்டிலும் பெயர் உள்ளது. மேலும் அவரது கூட்டாளிகளான தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகர், மலர் தெரு ரவிக்குமார் மகன் அன்பரசன் (28) மற்றும் ஒரு நபர் ஆகிய 3 பேரும் தான் தகராறு செய்தது என்பது அடையாளம் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாவட்டப் பொறுப்பாளரான ரவுடி பட்டியலில் உள்ள விஷ்ணுராஜை கைது செய்த ஆலங்குடி போலீசார் மற்றொரு இடத்தில் பதுங்கியுள்ள நபர்களை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மங்களாபுரம் பாலம் அருகே செல்லும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று விஷ்ணுராஜ் சொல்லியுள்ளார். போலீஸ் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்ட போது போலீசாரை தள்ளிவிட்டு தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்த விஷ்ணுராஜ் கால் முறிந்தது. உடனே போலீசார் அவரை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அதே பகுதியில் பதுங்கி இருந்த அன்பரசனை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.